நாமக்கல்லில் வாலிபரிடம் நகைபறித்த 4 பேர் கைது


நாமக்கல்லில் வாலிபரிடம் நகைபறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 10:15 PM GMT (Updated: 10 Oct 2019 9:04 PM GMT)

நாமக்கல்லில் வாலிபரிடம் நகைபறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அசோக்குமார் (வயது 28). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி தனது நண்பர் பாரதிராஜாவுடன் சினிமாவுக்கு சென்ற அசோக்குமார், அவரை வீசாணத்தில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். நாமக்கல்லில் உள்ள சேந்தமங்கலம் சாலையில் சென்றபோது, மேட்டுத்தெருவில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அசோக்குமாரை வழிமறித்து மிரட்டி, அவர் அணிந்து இருந்த 1½ பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டனர்.

4 பேர் கைது

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்த பாலமுருகன் (29), கொக்கிகுமார் என்கிற ராஜ்குமார் (25), எஸ்.சரவணன் (34), எல்.சரவணன் (33) ஆகியோர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று 4 பேரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருப்பதும், 4 பேர் மீதும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story