ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 10:28 PM GMT)

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மதுரை மண்டல மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் 16-வது மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மண்டல அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரை புதூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் மின் ஊழியர் சங்கத்தின் தலைவர் வீரணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி அரவிந்தன் உள்பட பலர் பேசினர்.

இந்த போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

பணி நிரந்தரம்

வயது வரம்பை தளர்த்தி அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரியம் அறிவித்த தினக்கூலி 380 ரூபாயை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்விபத்தில் அன்றாடம் ஒப்பந்த ஊழியர்கள் மரணம் அடையும் நிலையில், ஒப்பந்த ஊழியர்களே இல்லை என்று கூறி அறிக்கை அனுப்புவதை கண்டிக்கிறோம், விபத்தில் மரணம் அடையும் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குழு அமைத்து அடையாளம் கண்டு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

கைது

மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அவர்களிடம் போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 890 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் ரேஸ்கோர்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story