சென்னையில் வெடிகுண்டு வீச்சு: ரவுடி மனைவி-மகன் கைது


சென்னையில் வெடிகுண்டு வீச்சு: ரவுடி மனைவி-மகன் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 3:15 AM IST (Updated: 12 Oct 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடியின் மனைவி, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடியும் (வயது 50), மகன் அழகர்ராஜாவும் (28), தங்கள் ஆட்களுடன் நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு ஆஜராகிவிட்டு திரும்பி செல்லும்போது, அண்ணாசாலை அருகில் உள்ள காசினோ தியேட்டர் முன்பு தோட்டம் சேகரின் எதிரியான ரவுடி சிவகுமாரின் ஆட்கள் மலர்க்கொடியையும், அழகர்ராஜாவையும் அரிவாளால் வெட்டினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மலர்க்கொடி மற்றும் அழகர்ராஜா ஆட்கள் சிவகுமாரின் ஆட்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள்.

அதில் ஒரு வெடிகுண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதைத் தொடர்ந்து சிவகுமாரின் ஆட்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருகையின்போது, நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் சென்னை போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்தது. பட்டப்பகலில் சினிமா காட்சிபோல அரங்கேறிய இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர். வெடிகுண்டு தாக்குதலில் மலர்க்கொடி, அழகர்ராஜா மற்றும் அவர்களது ஆட்களான விஜயகுமார், மணிகண்டன் உள்பட 6 பேர் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரவடி சிவகுமாரின் ஆட்கள் 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவானது.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மலர்க்கொடி மற்றும் விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மலர்க்கொடியின் மகன் அழகர்ராஜா நேற்று கைது செய்யப்பட்டார்.

ரவுடி சிவகுமாரின் ஆட்களான அரவிந்தன், அப்பு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்க்கொடியின் ஆட்கள் 2 பேரையும், சிவகுமாரின் ஆட்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மலர்க்கொடியின் ஆட்களால் வீசப்பட்ட வெடிகுண்டுகள் மதுராந்தகத்தில் இருந்து வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Next Story