பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
செங்குன்றம்,
சென்னை நகர மக்களுக்காக வகுக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி மட்டுமின்றி புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் திறந்து விடுவது கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கல்குவாரிகள், தனியார் விவசாய கிணறுகள், வேலூர் மாவட்டத்தில் இருந்து ரெயில்களில் தண்ணீர் கொண்டு வந்து வினியோகிக்கப்பட்டது.
நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி அமைச்சர்கள் ஜெய குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடந்த 25-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கபட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 800 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனிடையே ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று காலை 10½ மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், உதவி பொறியாளர் ரமேஷ், சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 26.15 அடியாக பதிவானது. 1011 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரிக்கு வினாடிக்கு 542 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 27 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் தற்போது தென் சென்னையில் வினியோகிக்கப்படுகிறது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை மத்திய மற்றும் வட சென்னையில் வினியோகம் செய்ய உள்ளனர். இதனால் சென்னையில் இனி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story