வங்கி அதிகாரி வீட்டில் 117 பவுன் நகைகள் கொள்ளையடித்த கார் டிரைவர்கள் கைது - பரபரப்பு தகவல்கள்


வங்கி அதிகாரி வீட்டில் 117 பவுன் நகைகள் கொள்ளையடித்த கார் டிரைவர்கள் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:30 AM IST (Updated: 12 Oct 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நுங்கம்பாக்கத்தில் வங்கி அதிகாரியின் வீட்டில் 117 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த கார் டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விஸ்வநாதன் (வயது 43). இவர் தனியார் வங்கி ஒன்றின் துணை தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 6-ந்தேதி அன்று வங்கிக்கு விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினரோடு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றுவிட்டார்.

வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கார பெண்ணிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். வேலைக்கார பெண் வீட்டை திறந்து, வழக்கமாக செய்யும் வேலைகளை செய்துள்ளார்.

பின்னர் வேலைக்கார பெண் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பகுதியில் உள்ள பெட்டி ஒன்றில் வழக்கம்போல வைத்துவிட்டு சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பிய வங்கி அதிகாரி விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீடு பூட்டியநிலையில் இருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 117 பவுன் தங்க நகைகளும், 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக வங்கி அதிகாரி விஸ்வநாதன் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

முதலில் சந்தேகத்துடன் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரித்தனர். ஆனால் வேலைக்கார பெண்ணுக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வங்கி அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைத்தது.

நள்ளிரவு நேரத்தில் 2 பேர் வங்கி அதிகாரியின் வீட்டில் இருந்து கொள்ளையடித்த நகைகளை ஒரு பையில் போட்டு எடுத்தபடி வெளியில் வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.

நகைப்பையுடன் வந்த இருவரில் ஒருவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அவரது பெயர் சந்தானராஜ் என்ற குட்டி. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள அருணாசலபுரம் ஆகும். தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் சந்தானராஜை அவரது சொந்த ஊரில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சந்தானராஜ் சொன்ன தகவலின் அடிப்படையில் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட அவரது நண்பரான அரவிந்தன் என்பவரையும் கைது செய்தனர்.

அவர் காயல்பட்டினம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர். அவர் சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்தார். அவர்களிடமிருந்து 117 பவுன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் பத்திரமாக மீட்கப்பட்டது.

வங்கி அதிகாரியின் வீட்டு சாவியை வழக்கமாக பெட்டியில் வைத்து செல்வதை கார் டிரைவர் சந்தானராஜ் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளார்.

வங்கி அதிகாரி விஸ்வநாதன் குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி சந்தானராஜ், தனது நண்பரான அரவிந்தன் துணையோடு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்.

கைதான இருவரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story