அய்யம்பேட்டை அருகே, வயல்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை


அய்யம்பேட்டை அருகே, வயல்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 8:16 PM GMT)

அய்யம்பேட்டை அருகே நெல் வயல்கள், கரும்பு மற்றும் வாழை தோட்டங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள ஈச்சங்குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை, பெருமாள்கோவில், பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், வாழை, கரும்பு ஆகிய பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் வயல்கள் மற்றும் கரும்பு, வாழை தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதனால் பெரிய அளவில் ந‌‌ஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-

வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள் அதிகளவு ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. காட்டுப்பன்றிகள் நெல் நாற்றாங்கால்களில் படுத்து புரளுவதால் நாற்றுகள் முளைக்காமல் போய்விடுகிறது.

அறுவடைக்கு தயாரான கரும்புகளை காட்டுப்பன்றிகள் கடித்து குதறி விடுகின்றன. வாழை கன்றுகளையும் காட்டுப்பன்றிகள் விடுவதில்லை. அவற்றை பிடுங்கி எறிந்து விடுகின்றன. இரவு நேரங்களில் வயல் வெளிகளில் தங்கி காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்து வருகிறோம். எனவே காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story