ஆற்காடு ரோட்டில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆற்காடு ரோட்டில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:16 PM GMT)

வேலூர் ஆற்காடு ரோட்டில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மாதகணக்கில் கழிவுநீர் தேங்கி நோய்பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர், 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலாலும், மர்ம காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டி சுத்தமாக உள்ளதா? டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஆனால் மாநகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் தேங்கி அதன் மூலம் நோய் பரவும் சூழ்நிலையில் உள்ளதை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்காடு ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `வீடு வீடாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீரை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Next Story