நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனை - 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனை - 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 8:17 PM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நாமக்கல் கடைவீதி, பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 67 கடைகளில் நடந்த சோதனையில் 13 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கடைகளில் இருந்த 11 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.10,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது துப்புரவு அலுவலர் சுகவனம், துப்புரவு ஆய்வாளர்கள் சையது காதர், உதயகுமார், செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெண்ணந்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அலவாய்ப்பட்டி, ஆலாம்பட்டி, தொட்டியவலசு, நெ.3.கொமாரபாளையம், அனந்தகவுண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள தனியார் வணிக அங்காடிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்வேல், பாஸ்கர் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளடங்கிய குழுவினால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அங்காடிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.2,400 வசூல் செய்யப்பட்டு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு பொது நிதியில் செலுத்தப்பட்டது.

இதேபோல நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story