அபராதம் விதிப்பதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் மணல் லாரி உரிமையாளர்கள், திருச்சி கலெக்டரிடம் புகார்


அபராதம் விதிப்பதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் மணல் லாரி உரிமையாளர்கள், திருச்சி கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

அபராதம் விதிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் புகார் செய்து உள்ளனர்.

திருச்சி, 

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அதன் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லி, எம்.சாண்ட், கிராவல் மண் போன்ற பொருட்களை மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே எடுத்து வரும் லாரிகள் மீதும், கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு செல்லும் லாரிகள் மீதும் போலீசார், வருவாய் துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஏதாவது ஒரு குறைகளை சொல்லி கடுமையான அபராதம் விதிக்கிறார்கள்.

ஏற்கனவே சுங்க கட்டண உயர்வு, டீசல் மற்றும் டயர் விலை உயர்வின் காரணமாக நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் முறையான ஆவணங்களை வைத்திருக்கும் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மற்றும் அதிகாரிகள் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து கட்டுமான பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக ஏற்றி வரும் லாரிகளை விட்டு விடுகிறார்கள். அதிகாரிகள் காட்டி வரும் இந்த பாரபட்ச போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அவர்கள் கொடுத்த மற்றொரு மனுவில் திருெவறும்பூரில் சட்ட விரோதமாக பறிமுதல் செய்த லாரியை விடுவிக்க வேண்டும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story