கிருஷ்ணகிரி அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - பஸ் கண்டக்டர் கைது


கிருஷ்ணகிரி அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - பஸ் கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமறதி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 53). முன்னாள் ராணுவவீரர். இவர் கிருஷ்ணகிரி, வள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சுப்பிரமணி(44) என்பவரிடமும், தீர்த்தகிரிபட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்பவரிடமும் ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் வேலை எதுவும் வாங்கி தரவில்லை என தெரிகிறது. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை எனக்கூறப்படுகிறது.

இது குறித்து முனிராஜ் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் சுப்பிரமணி மற்றும் ஸ்ரீதர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் சுமார் ரூ.20 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். ஸ்ரீதரை தேடி வருகிறார்கள்.

Next Story