திருவண்ணாமலையில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருவண்ணாமலையில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 12 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 100 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சிைய கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 3-வது ஆண்டாக திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று நடந்த தொடக்க விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் கந்தசாமி ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த புத்தக கண்காட்சி வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களை கவரும் வகையிலான நன்னெறி புத்தகங்கள், சிறுகதைகள், பொது அறிவு, போட்டித்தேர்வு உள்பட 10 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த புத்தக கண்காட்சி வழிவகுக்கும். பலர் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். வீட்டில் நூலகம் அமைக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் கூறுகையில், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மாணவர்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலர் இங்கு வந்து பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் என்றார்.

கண்காட்சியில் கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வன், நேர்முக உதவியாளர்கள் அன்பழகன், எழிலழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Next Story