கர்நாடக காட்டில் சுற்றித்திரிந்து தமிழக எல்லையில் மனிதர்களை வேட்டையாடும் புலி; கும்கி யானையுடன் வனத்துறையினர் தேடுகிறார்கள்


கர்நாடக காட்டில் சுற்றித்திரிந்து தமிழக எல்லையில் மனிதர்களை வேட்டையாடும் புலி; கும்கி யானையுடன் வனத்துறையினர் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 5:00 PM GMT)

கர்நாடக எல்லையில் சுற்றித்திரிந்து தமிழக எல்லையிலும் மனிதர்களை வேட்டையாடும் புலியை பிடிக்க கும்கி யானையுடன் வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக விளங்குவது தாளவாடி. சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வனப்பகுதியை சுற்றிலும் கொண்ட தாளவாடியையொட்டி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப்பகுதி உள்ளது. நமது சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் போன்று, சாம்ராஜ் நகர் மாவட்ட வனப்பகுதி பந்திப்பூர் புலிகள் காப்பகமாக உள்ளது.

இந்த வனத்துக்கு உள்பட்ட கிராமமாக சவுதஹள்ளி உள்ளது. தமிழக எல்லையையொட்டி இருக்கும் சவுதஹள்ளியில் கடந்த சில வார காலமாகவே மனிதர்களை வேட்டையாடும் புலியின் அட்டகாசம் தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி சவுதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிவமாதையா என்பவர் வனப்பகுதிக்குள் சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்துக்கொன்றது. யானைகள், காட்டு எருமைகளை எதிர்நோக்கி பழகி இருந்த இந்த கிராம மக்களுக்கு புலியின் திடீர் தாக்குதல் பேரதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து அவர்கள் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் புலி குறித்து வனத்துறையினரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதே நேரம் புலி தனது வேட்டையை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 மாடுகள் புலியால் அடித்துக்கொல்லப்பட்டன.

இந்தநிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு, சவுதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிலர் மாடு மேய்ப்பதற்காக, மாடுகளை ஓட்டிக்கொண்டு வனப்பகுதிக்குள் நுழைந்தனர். அப்போது நேரம் பகல் 10.30 மணி. மாடு மேய்க்கச்சென்ற சிவலிங்கப்பா என்பவர் வனத்தில் மறைவான ஒரு பகுதிக்கு சென்றார். சென்ற சில வினாடிகளிலேயே அவரது மரண ஓலம் கேட்டது. அவருடன் வந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது கொலைவெறியுடன் புலி ஒன்று சிவலிங்கப்பாவை பிடிக்குள் வைத்திருந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன, அவர்கள் ஓடிச்சென்று அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளையும் கூக்குரலிட்டு அழைத்தனர். அவர்கள் ஓடிவந்து சத்தம் எழுப்பினார்கள். ஆனால் புலி எந்த சலனமும் இன்றி, சிவலிங்கப்பாவை கொன்றது. இதற்கிடையே கிராமத்துக்குள் தகவல் பரவியதால் கிராம மக்களும் விரைந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாகி, கூக்குரல் சத்தம் அதிகமானதால், சிவலிங்கப்பாவின் உடலை அங்கேயே போட்டு விட்டு புலி காட்டுக்குள் சென்று மறைந்தது. மனிதர்களை வேட்டையாடிய புலிகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது.

இந்த சம்பவம் கர்நாடகப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களை வேட்டையாடும் புலியை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் காரணமாக கர்நாடக வனத்துறையினர் புலியை பிடிக்க களம் இறங்கி உள்ளனர். புலியை சுட்டுக்கொன்று மக்களை காப்பாற்ற கர்நாடக வனத்துறை அதிரடியில் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் புலியை கொல்லும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

தற்போது தமிழக எல்லை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதியில் கர்நாடக வனத்துறையினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புலி நடமாடும் பகுதி என கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் புலியை பிடிக்க கூண்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, வன ஊழியர்கள் யானையின் மீது உட்கார்ந்து காட்டு பகுதிகளில் வலம் வந்து புலியை ேதடி வருகிறார்கள்.

இதுகுறித்து பந்திப்பூர் புலிகள் காப்பக வனஉயிர் அறிவியலாளர் கூறியதாவது:-

கிராம மக்கள் மற்றும் மாடுகளை தாக்கி கொன்ற புலி குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மனிதர்களை கொன்றதும், மாடுகளை கொன்றதும் ஒரே புலி என்பதை கண்டறிந்து இருக்கிறோம். இந்த புலிக்கு 8 அல்லது 9 வயது இருக்கும். புலியின் உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. காயம் காரணமாக காட்டு விலங்குகளை விரட்டிப்பிடித்து வேட்டையாட முடியாததால், கிராமப்பகுதியையொட்டி வந்திருக்கலாம். மாடுகள் மற்றும் மனிதர்களை தாக்குவது எளிது என்பதால் இந்த பகுதியை சுற்றி வருகிறது என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை அந்த புலி எந்த கேமராவின் பதிவிலும் சிக்கவில்லை. எனவே அது ஆண் புலியா, பெண் புலியா என்பது உள்ளிட்ட வேறு விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புலியை பார்த்ததும் மயக்க ஊசி செலுத்த கால்நடை டாக்டர்கள் கொண்ட 6 குழுவினரும் வனத்துறையினருடன் களம் இறங்கி இருக்கிறார்கள். தமிழக எல்லையில் பதற்றம் ஏற்படுத்தி இருக்கும் ஆட்கொல்லி புலியை கர்நாடக வனத்துறையினர் தேடிவரும் நிலையில், தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story