புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:45 AM IST (Updated: 12 Oct 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று செந்தாமரை நகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார்.

அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன், பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களைக்கூட இந்த ஆட்சியில் செய்யாததால் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறினர். எத்தனை குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளனர். பஞ்சாலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை என்னவானது?

இவர்கள் புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவில்லை. இவர்களது ஆட்சி சீரழிவுப்பாதைக்குத்தான் செல்கிறது. இலவச அரிசி வழங்காததற்கு கவர்னர், எதிர்க்கட்சிகள் மீது பழியை போடுகின்றனர். நாங்கள் ஏன் இலவச அரிசி வழங்குவதை தடுக்கப் போகிறோம். அரிசியை வழங்காமலும் அதற்காக மத்திய அரசு தரும் நிதியையும் இவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் உள்ளனர்.

தினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டுதான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும். இவைகளை மீண்டும் எடுத்துக்கூறி விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத அரசாக இந்த அரசு உள்ளது. பத்திரப்பதிவு துறையில் யாரேனும் ஒரு சிறிய இடம் வாங்கி பதிவு செய்ய முடிகிறதா?

ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வேலை செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். நாராயணசாமி முதல்-அமைச்சரான பின் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ரங்கசாமி இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க நினைத்தால் அரசு ஒரு நாள் கூட நீடிக்காது. மத்திய அரசு ஸ்மார்ட்சிட்டி, சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் என ரூ.3,500 கோடி திட்டங்களை கொடுத்துள்ளது. ஆனால் இந்த அரசு எதையும் செயல்படுத்தவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அரிசி போடவில்லை. அரிசி போடாத மாதத்திற்கான பணத்தையும் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை. இலவச அரிசி வழங்காததற்கும், எதிர்க்கட்சிக்கும் என்ன சம்பந்தம்? இதில் எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டுவது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும்.

சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? கடந்த 8 ஆண்டுகளாக அமைதியாக இருந்த முதலியார்பேட்டையில் தி.மு.க. கலவரத்தை ஏற்படுத்துகிறது. அராஜகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தவர் ரங்கசாமிதான். ஆனால் இந்த அரசு காலி பணியிடங்களைக்கூட நிரப்பவில்லை.

மக்களுக்கு செய்வதை தடுக்கும் எண்ணம் ரங்கசாமிக்கு இல்லை. நெல்லித்தோப்பில் ஓட்டுகளை விலைக்கு வாங்கியவர்தான் ஜான்குமார். தற்போது இந்த தொகுதியில் ஓட்டுகளை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல் உள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்குக்கூட இந்த அரசுக்கு தைரியம் இல்லை. சட்டசபையை குறைந்த நாட்களே நடத்துவதால் புதுச்சேரிக்கு சட்டசபை தேவையா? என்ற எண்ணத்தை மத்திய அரசிடம் புதுவை அரசு உருவாக்கி வருகிறது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story