கோத்தகிரி நேரு பூங்காவில் குடிநீர் தொட்டி கட்டும் பணியை கைவிட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


கோத்தகிரி நேரு பூங்காவில் குடிநீர் தொட்டி கட்டும் பணியை கைவிட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2019 10:15 PM GMT (Updated: 12 Oct 2019 5:53 PM GMT)

கோத்தகிரி நேரு பூங்காவில் குடிநீர் தொட்டி கட்டும் பணியை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி, 


கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்பில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு அப்பணிகள் அனைத்தும் கடந்த சில மாதத்திற்கு முன்பு நிறைவடைந்தன.

இதனைத்தொடர்ந்து கோத்தகிரி நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீரை வினியோகம் செய்வதற்காக புதிய குடிநீர் குழாய்கள் மற்றும் எந்தெந்த பகுதிகளில் குடீநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக சென்னையில் இருந்து பொறியாளர் குழுவினர் கோத்தகிரி பகுதிக்கு வந்தனர். பின்னர் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சக்திமலை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் வினியோகிக்கும் 8 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு தண்ணீரை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கடந்த வாரம் சக்திமலை பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் மாநில பேரிடர் சீரமைப்பு நிதி மூலம் குடிநீர் தொட்டி கட்ட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே நீர்உந்து நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் 5 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யும் வகையில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் கடந்த வாரம் முதல் தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேரு பூங்கா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள குடிநீர் தொட்டி கட்டும் பணிக்கான இடத்தை மாற்றி, நீர்உந்து நிலைய வளாகத்திலேயே அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கோத்தகிரி மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வருடந்தோறும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாவையொட்டி முதல் நிகழ்ச்சியாக நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்காணக்கானோர் பூங்காவிற்கு வந்து காய்கறிகளால் செய்யப்படும் சிற்பங்களை கண்டுகளித்து செல்கின்றனர். ஏற்கனவே பூங்காவிற்கு வெகு அருகாமையில் உள்ள நீர் உந்து நிலைய வளாகத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைக்க போதுமான இடவசதி இருந்தும்கூட, நேரு பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவின் ஒரு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் நேரு பூங்காவின் பரப்பளவு மேலும் குறைவதுடன் சிறுவர் பூங்கவின் இடவசதியும் குறைய வாய்ப்புள்ளது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே சிறுவர் பூங்காவில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணியை கைவிட வேண்டும். மேலும் நீர்உந்து நிலையம் அருகே குடிநீர் தொட்டி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story