பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம்


பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 4:00 AM IST (Updated: 12 Oct 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகள், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பொதுமக்களும் அவ்வாறே தங்கள் வீடுகள், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும்படி செயலாற்றி வருகிறார் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன். இவை அனைத்துக்கும் மேலாக பொதுமக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளை பயன்படுத்தி இயற்கை உரத்தின் மூலம் மக்களுக்கு அன்றாடம் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளை பயிரிட்டு பலன் பெறலாம் என்பதையும் நிரூபித்து வருகிறார். வெறும் வார்த்தைகளுடன் நின்று விடாமல் தானே முன்வந்து அதை செயல்வடிவில் நிரூபித்தும் காட்டியுள்ளார்.

பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மொட்டை மாடியில் தகரத்தாலான தொட்டிகளை தயார் செய்து அதில் மண்ணை நிரப்பி வெண்டை, தக்காளி, பாகற்காய், கேரட், புடலங்காய், பீர்க்கங்காய் மற்றும் பலவகையான கீரைவகைகளை பயிரிட்டு காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்.

இதன் மூலம் கிடைத்த காய்கறிகளையும், கீரைகளையும் தனது அலுவலக ஊழியர்களுக்கு பங்கிட்டு தருகிறார். இந்த காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரங்களை பயன்படுத்துகிறார். இதற்காக உரங்களை தேடி போவதில்லை. அலுவலக துப்புரவு தொழிலாளர்கள் பேரூராட்சி தெருக்களில் அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளில் இருந்து பொதுமக்கள் உதவாது என வீசி எறிந்த காய்கறி கழிவுகளையே உரமாக பயன்படுத்துகிறார்.

மேலும் செடிகளை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்க பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்தாமல், வேப்ப எண்ணெய் பயன்படுத்துகிறார். இதன் மூலம் காய்கறிகள் அதன் தன்மை கெட்டு நச்சுத்தன்மை அடையாமல் உண்மையான சுவையுடன் கிடைக்கிறது.

தனது அலுவலக மொட்டை மாடியில் காய்கறிகளை பயிரிட்டு, பொது மக்களுக்கு உதாரணமாக இருக்கும் செயல் அலுவலர் கலாதரனை பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

Next Story