தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது


தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 5:30 AM IST (Updated: 13 Oct 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே ரூ.7 லட்சத்திற்காக பெற்றோரை கொலை செய்து புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து புதைத்த உடல்களை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்கோட்டை அருகே உள்ளது நாச்சியார்புரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 65). இவரது மனைவி வெள்ளையம்மாள்(60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் முத்து(40) என்பவர் கண் பார்வையற்றவர். 2-வது மகன் சோணைமுத்து(35). இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

சோனைமுத்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில், ஆறுமுகத்திற்கு சொந்தமான சுமார் 6 சென்ட் நிலம், திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்டு, அதற்குரிய தொகையாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்த பணத்தை பெறுவதற்காக சோணைமுத்து தனது தாய், தந்தையிடம் தினமும் தகராறு செய்து வந்தார்.

ஆனால் ஆறுமுகம் தம்பதியினர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சோணைமுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு தந்தை ஆறுமுகத்தை கட்டையால் அடித்து கொலை செய்தார். இதை மறைத்து, தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இறந்துவிட்டதாக கிராமத்தினரிடம் கூறி, உடலை கண்ணங்கோட்டை என்ற பகுதியில் புதைத்துள்ளார். மேலும் தந்தை கொலையை யாரிடமும் சொல்லக்கூடாது என்று தாய் வெள்ளையம்மாள் மற்றும் கண் பார்வை தெரியாத சகோதரரிடம் கூறி அவர்களையும் மிரட்டி வைத்திருந்தார்.

இந்தநிலையில் ரூ.7 லட்சம் வெள்ளையம்மாள் வசம் இருந்துள்ளது. இதையடுத்து சோணைமுத்து பணத்தை கேட்டு தாயிடமும் தினமும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் தாயாரும் கொடுக்க மறுத்ததால், கடந்த 8-ந்தேதி வெள்ளையம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதே பகுதியில் யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டார். பின்பு தாயாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கிராம மக்களிடம் நாடகமாடி உள்ளார்.

இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிசெல்லத்துரை மற்றும் போலீசார், சோணைமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.7 லட்சத்திற்காக தந்தையை அடித்து கொலை செய்து புதைத்துவிட்டதாகவும், தாயை கொன்று உடலை எரித்து விட்டதாகவும் சோணைமுத்து கூறினார்.

இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் நேற்று தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ், வருவாய்த்துறையினர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் நடராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் நாச்சியார்புரம் கிராமத்திற்கு சென்று புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

சோணைமுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டை அருகே 11-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story