சிவன் கோவில்களில் பிரதோ‌‌ஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சிவன் கோவில்களில் பிரதோ‌‌ஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 7:37 PM GMT)

சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோ‌‌ஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரதோ‌‌ஷ வழிபாடு நடைபெற்றது. மாதம் இருமுறை வரும் இந்த பிரதோ‌‌ஷ நாளில் கோவிலுக்கு சென்று வழிபடும் பக்தர்களுக்கு மனக்குழப்பம், மனக்க‌‌ஷ்டங்கள், குடும்ப பிரச்சினைகள் ஆகியவை நீங்கி நலம்பெறுவர் என்பது ஐதீகம். பிரதோ‌‌ஷ வழிபாட்டையொட்டி இந்த கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நந்தி பெருமான் வீதிஉலா நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

இதில் திருமழபாடி, கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாடி, மேட்டூர், விளாகம், அரண்மனைக் குறிச்சி, பாளயபாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் கீழப்பழுவூர் ஆலந்துறையார் சிவன் கோவில், மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்பட சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் கோவில் களிலும் பிரதோ‌‌ஷ வழிபாடு நடைபெற்றது.

Next Story