"உலக தலைவர் வருகையை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது" கே.எஸ்.அழகிரி பேட்டி


உலக தலைவர் வருகையை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

உலக தலைவர் வருகையை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதசார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடிய கூட்டணி அல்ல.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் 5 ஆயிரம் ஆண்டு கலாசார பாரம்பரியம் உண்டு. நவீன காலத்தில் ஜவகர்லால் நேரு பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக சீன அதிபர் தற்போது இங்கு வந்து உள்ளார். இதனால் நமக்கும் அவர்களுக்கும் தொழில் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பல உடன்பாடுகள் ஏற்பட்டால் நல்லது. உலக தலைவர் வருவதை உலக வி‌‌ஷயமாக வைத்து கொள்ள வேண்டும். அதனை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என்பதை ஆளும் கட்சி உணர வேண்டும்.

பா.ஜனதாவினர் மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நம் உலகம். எனவே எல்லா கலாசாரத்தையும் அங்கீகரிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது. தூத்துக்குடியில் 3 மாதங்களில் 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. தவறுகள் செய்தவர்கள் யார் என்று தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம்.

அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன?, பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதெல்லாம் புரியாத ஒன்று. ஆனாலும் ஒரு விதிவசத்தால் இந்த கூட்டணி ஓடிக்கொண்டு இருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story