ஆத்தூர் காமராஜர் அணை கால்வாய் ரூ.77½ லட்சத்தில் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு


ஆத்தூர் காமராஜர் அணை கால்வாய் ரூ.77½ லட்சத்தில் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

ஆத்தூர் காமராஜர் அணையின் வரத்து கால்வாய் ரூ.77½ லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணையின் வரத்து கால்வாய் சேதமாகி இருந்தது. இதையடுத்து குடிமராமத்து திட்டத்தில் ரூ.77½ லட்சம் செலவில் அந்த கால்வாய் சீரமைக்கப்படுகிறது. அந்த பணியை நேற்று கலெக் டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

குடிமராமத்து திட்டத்தில் ரூ.47 கோடியே 41 லட்சம் செலவில், மாவட்டம் முழுவதும் 114 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ.77½ லட்சம் செலவில் ஆத்தூர் காமராஜர் அணை வரத்து கால்வாய் சீரமைக்கப்படுகிறது. இதையொட்டி கால்வாயில் 90 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவரும், சொக்குபிள்ளை ஓடையில் 20 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவரும் கட்டப்படுகிறது.

இந்த கால்வாய் மூலம் கருங்குளம், பகடைகுளம், புல்வெட்டிகுளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் செல்கிறது. அதையொட்டி ஆத்தூர், ஆதிலட்சுமிபுரம், சித்தையன்கோட்டை, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, சீவல்சரகு, பழைய செம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 800 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் குடிமராமத்து திட்ட பணிகளை பருவமழை தொடங்கும் முன்பு முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீர்நிலைகளில், மழைநீரை முழுமையாக சேமித்து, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தங்கவேலு உள்ளிட்ட அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உடன் இருந்தனர்.

Next Story