டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர்,
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெங்கு மற்றும் நமது நகர் தூய்மை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன், இணை பொதுச்செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது ஆங்காங்கே தெரிகிறது. இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் போன்றவற்றின் பங்களிப்பு இருந்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவிகரமாக இருக்கும்.
நம்ம வீடு சுத்தமாகத்தான் இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. வீட்டையும், சுற்றுப்புறத்தையும் நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க முடியும். சாக்கடை தேங்கி நிற்கிறது, குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கூறலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் சாக்கடை தண்ணீருக்கும், டெங்குவுக்கும் தொடர்பு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி மழைக்காலம் வரவிருக்கிறது. வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசுப்புழுக்கள் தனிமனித சுத்தம் அவசியம். குப்பைகளை கால்வாயில் கொட்டக்கூடாது. வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினால் கை, கால்களை கழுவ வேண்டும். சுகாதார பழக்கவழக்கங்களை கடை பிடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு அலுவலகங்களிலும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கடலூர் நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி, லட்சுமி சோரடியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story