திண்டிவனத்தில் பரபரப்பு ஓய்வுபெற்ற ஆந்திரா அரசு அதிகாரி ரெயிலில் திடீர் சாவு - போலீசார் விசாரணை
ஓய்வுபெற்ற ஆந்திரா அரசு அதிகாரி ரெயிலில் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திண்டிவனம்,
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி இதா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுப்பு (வயது 64). ஓய்வுபெற்ற வேளாண்மை அதிகாரியான இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி ஏசுப்பு நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தார். பின்னர் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில், முன்பதிவு பயணிகளுக்கான பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரெயில் வந்த போது, ஏசுப்புவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ரெயில்வே போலீசார் 108 ஆம்புலன்சுடன் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் அந்த ரெயில் நள்ளிரவு 12.10 மணிக்கு திண்டிவனம் வந்ததும், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் மற்றும் போலீசார், ஏசுப்புவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏசுப்பு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story