மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கல்லூரி மாணவர் பலி தாயாருக்கு தீவிர சிகிச்சை


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கல்லூரி மாணவர் பலி தாயாருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 9:10 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். உடன் வந்த தாயாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழித்துறை,

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மரியகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 55), வியாபாரி. இவருடைய மனைவி சுஜிதாகுமாரி (44). இவர்களது மகன் ராகேஷ் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

சுஜிதாகுமாரியின் தாய் வீடு குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வாழையத்துவயல் பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ராகேஷ் தனது தாயார் சுஜிதாகுமாரியுடன் வாழையத்துவயல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் செல்லும் போது எதிரே வேன் ஒன்று வேகமாக வந்தது. அந்த வேன் திடீெரன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராகேசும், சுஜிதாகுமாரியும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் வேனும் தலைகீழாக கவிழ்ந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகேஷ் பரிதாபமாக இறந்தார்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள சுஜிதாகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸ் வருவதை அறிந்ததும், வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடந்த வேனை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story