பாப்பாரப்பட்டி அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மத்தாளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி, விவசாயி. இவருடைய மகள் கொல்லாபுரி (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி உடல் நலம் சரி இல்லை என்று பெற்றோரிடம் கூறி விட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி கொல்லாபுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.