காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேட்டி


காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2019 4:45 AM IST (Updated: 13 Oct 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று காலை ரெயின்போ நகர், சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர் ஜானிபாய், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், வேட்பாளர் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். பிரசாரத்தின் போது ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். இதுவரை 20 வார்டுகளுக்கு மேல் சென்றுள்ளோம். சென்ற இடமெல்லாம் மக்கள் மத்தியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த அரசு கடந்த 3 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. ஏற்கனவே எங்கள் ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் கூட தற்போது செயல்படுத்தப்படவில்லை.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் இலவச அரிசி மாதந்தோறும் வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை. இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். நாங்கள் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் கேட்கும் போது அவர்கள் காங்கிரஸ் அரசின் மீது ஏராளமான குறைகளை கூறி வருகின்றனர். மேலும் எங்களிடம் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர். இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பின்னர் இந்த பகுதி பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளர் புவனேஸ்வரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story