தஞ்சைக்கு கார்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரியகோவில் கட்டிட கலையை பார்த்து வியந்தனர்


தஞ்சைக்கு கார்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரியகோவில் கட்டிட கலையை பார்த்து வியந்தனர்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 5:04 PM GMT)

தஞ்சைக்கு கார்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பெரியகோவில் கட்டிட கலையை பார்த்து வியந்தனர்.

தஞ்சாவூர்,

இந்திய கலாசாரம் மற்றும் பண்பாடுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 42 பேர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்னைக்கு வந்தனர். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களை கார்களில் சென்று பார்வையிட முடிவு செய்தனர். இதற்காக ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட 21 கார்களில் 42 பேரும் புறப்பட்டனர். கார்களை அவர்களே ஓட்டினர்.

கடந்த 9-ந் தேதி சென்னை மகாபலிபுரத்தில் இருந்து கார்களில் புறப்பட்ட இவர்கள் புதுச்சேரி வழியாக தஞ்சைக்கு நேற்று வந்தனர். இங்கு அரண்மனை வளாகத்திற்கு சென்ற இவர்கள் கலைக்கூடம், சரசுவதிமகால் நூலகம், தர்பார் மண்டபம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர்.

கட்டிட கலை

அங்கு சிற்பங்கள், கட்டிட கலைகளை பார்த்து வியந்தனர். கோவில் எந்த காலத்தில் கட்டப்பட்டது, அதற்கான கற்கள் எந்த பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. பின்னர் அவர்கள் கார்களில் புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு சென்றனர். இவர்கள் மதுரை, கோவை, மூணாறு வழியாக ஆலப்புழா கடற்கரையில் வருகிற 20-ந் தேதி தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறும்போது, கார்களில் வந்தால் நாம் எந்த இடத்தை பார்க்க வேண்டுமோ அந்த இடத்தில் காரை நிறுத்தி அவற்றை பார்த்து மகிழ வசதியாக இருக்கிறது. ஒரு காரில் 2 பேர் வருகிறோம். மாறி, மாறி காரை ஓட்டி செல்கிறோம். பஸ்களில் வந்தால் வரும் வழியில் உள்ள சில இடங்களை பார்க்க முடியாது. இந்த அனுபவம் நன்றாக இருக்கிறது. பெரியகோவில் கட்டிட கலை சிறப்பாக இருக்கிறது. தமிழக உணவு வகைகள் மிகவும் ருசியாக இருந்தது என்றனர்.

Next Story