பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 4:45 AM IST (Updated: 13 Oct 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறக்கப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த வெள்ளிக்கிழமை காலை பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 250 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் புழல் ஏரியை சென்றடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 321 கனஅடியாக திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.35 அடியாக பதிவானது. 1041 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 504 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story