சென்னை சவுகார்பேட்டையில் தங்கும் விடுதியில் பதுக்கி வைத்த 46 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்; பிடிபட்டவரிடம் வருமானவரித்துறை விசாரணை


சென்னை சவுகார்பேட்டையில் தங்கும் விடுதியில் பதுக்கி வைத்த 46 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்; பிடிபட்டவரிடம் வருமானவரித்துறை விசாரணை
x
தினத்தந்தி 14 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

சவுகார்பேட்டையில் தங்கும் விடுதியில் பதுக்கி வைத்திருந்த 46 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்திருந்த நபரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை பூக்கடை, யானைக்கவுனி, சவுகார்பேட்டை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பதுக்கி வைத்திருப்பதாக பூக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், தனிப்படை போலீசார் நேற்று இரவு யானைக்கவுனி, சவுகார்பேட்டை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும், தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சவுகார்பேட்டை சமுத்திர முதலிதெருவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு 46 கிலோ வெள்ளி கட்டிகள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த அறையில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வைத்திருந்த வெள்ளி கட்டிகளுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் பழனிவேல் மற்றும் கைப்பற்றப்பட்ட 46 கிலோ வெள்ளி கட்டிகளையும் சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story