கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டிக்கொலை; 3 பேரிடம் விசாரணை


கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டிக்கொலை; 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 14 Oct 2019 5:00 AM IST (Updated: 14 Oct 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). புகைப்பட கலைஞர். இவருக்கும் சுண்ணாம்புகுளம் அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவி (30) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது முருகன் செங்கல் சூளைமேடு கிராமத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் முருகன் பிணமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆரம்பாக்கம் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து முருகனின் அண்ணன் பொன்னுசாமி (41) என்பவர் ஆரம்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு சின்ன சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும், எனது தம்பியான முருகனின் மனைவி தேவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக சந்தேகத்தின் பேரில், முருகனும் அவரது உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து யுவராஜை கொலை செய்த வழக்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது முருகன் தனது குடும்பத்தோடு செங்கல் சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வினோத் (24) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு தேவி வெளியே சென்றுவிட்டார்.

பின்னர் அவரை கிராம மக்கள் முன்னிலையில் சமாதானம் செய்து முருகனுடன் சேர்த்துவைத்தார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முருகன் என் வீட்டிற்கு நேரில் வந்தார். அப்போது மனைவி தேவி மீது சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதால் என்னிடம் வீண் தகராறு செய்கிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் முருகனை கொலை செய்துவிட்டார்கள் என்று தேவியின் சகோதரர் மகேஷ் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். எனவே எனது தம்பி முருகனை கொலை செய்தது அவரது மனைவி தேவி மற்றும் அவருடன் மற்றொருவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் மாவட்ட கைரேகை நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில், புகாரில் குறிப்பிட்டு உள்ள தேவியின் கள்ளக்காதலன் வினோத் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அவர் ஏன்? விஷம் குடித்தார் என்பது தெரியவில்லை.

கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா? அதற்கு முருகனின் மனைவி தேவியே உடந்தையாக இருந்தாரா? அல்லது ஏற்கனவே யுவராஜ் என்பவரின் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதால் முருகனை யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முருகனின் மனைவி தேவி உள்பட 3 பேரிடம் ஆரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story