கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது


கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 7:38 PM GMT)

கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே நாராயணமங்கலம் மெயின் ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒருவர் வாகன விபத்தில் இறந்து கிடப்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் மணல்மேடு அருகே உக்கடை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் (வயது 52) என்பது தெரியவந்தது. ராஜகோபால் இறந்து கிடந்த இடத்தின் அருகே மரத்தில் மோதிய நிலையில் ஒரு காரும், அதன் அருகில் ராஜகோபால் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் கிடந்தன. இதனால் போலீசார் விபத்தில் ராஜகோபால் பலியானதாக வழக்குப்பதிவு செய்தனர்.

வங்கி செயலாளர் கைது

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிலர் சதி திட்டம் தீட்டி ராஜகோபாலை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.

மேலும் கொலை செய்யப்பட்ட ராஜகோபாலின் மனைவியுடன், இளந்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பட்டவர்த்தியை சேர்ந்த அமீர்ஹதர்கான் (53) என்பவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜகோபால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பட்டவர்த்தியை சேர்ந்த ராஜே‌‌ஷ் (32), சேத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் (23), கர்ணன் (40), சத்தியராஜ் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அமீர்ஹதர்கானை போலீசார் பட்டவர்த்தியில் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story