போக்குவரத்து நெரிசல் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது


போக்குவரத்து நெரிசல் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசல் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் தினம் தினம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருக்கும் பஸ் நிறுத்தங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டதி பெண்கள் பள்ளி சந்திப்பில் இருந்த பஸ் நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கூடத்துக்கு முன் அமைக்கப்பட்டது.

இதே போல கலெக்டர் அலுவலகம் முன் உள்ள பஸ் நிறுத்தத்தாலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

பின்னர் இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கூறி சம்மதம் பெற்றனர். இதைத் தொடர்ந்து பஸ் நிறுத்தம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. முதலில் ஜெயிலுக்கும், அரசு விருந்தினர் மாளிகைக்கும் இடையே பஸ் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு பஸ் நிறுத்தம் அமைத்தால் ஜெயில் முன் மக்கள் நடமாட்டம் அதிகரித்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கருதினர். எனவே அங்கு பஸ் நிறுத்தம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீ கடையை ஒட்டியபடி பஸ் நிறுத்தம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ேபாக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது டீ கடை அருகே கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து அங்கு பஸ் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்குள்ள மரங்களையும் வெட்டி அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மரம் வெட்டி அகற்றம்

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே மாற்று இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக சுற்றுச்சுவரை ஒட்டியபடி வளர்ந்திருந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். ஒரு வாகை மரம் மற்றும் ஒரு மா மரத்தின் பாதி கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டன. முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட வாகை மரமானது மிகவும் பழமைவாய்ந்த மரம் ஆகும். மரம் முழுவதும் வெட்டப்பட்ட பிறகு அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுற்றுச் சுவரை இடிக்கும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story