‘தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாததை பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள்’ - ராஜ்தாக்கரே தாக்கு


‘தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாததை பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள்’ - ராஜ்தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 10:00 PM GMT)

தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளை பா.ஜனதா தலைவர்கள் பேசுவதாக ராஜ்தாக்கரே கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நவநிர்மாண் சேனா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் கல்யாண் மற்றும் பிவண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியம் விவசாயிகள் தற்கொலை, மோசமான சாலைகள் போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் மராட்டிய தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளை பேசுகிறார்கள்.

குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தான் மீண்டும், மீண்டும் பேசி கொண்டு இருக்கிறார்.

அவர்கள் தங்களுக்கு வசதியாக மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை எதிர்கொள்ள சரியான எதிர்க்கட்சி இல்லை. அதற்கு நவநிர்மாண் சேனா தான் சிறந்த தேர்வு.

அரபிக்கடலில் ஏன் இன்னும் மன்னர் சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டு விட்டது. அந்த சிலை சீன தயாரிப்பு ஆகும். மக்கள் யாரும் சீன தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது.

மற்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்பவர்களால் மும்பை மற்றும் அருகாமையில் உள்ள நகரங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பீகார், உத்தரபிரதேசத்தில் இருந்து வருபவர்களை நான் எதிர்த்த போது, மிகுந்த கூப்பாடும், அழுகையும் இருந்தது. ஆனால் குஜராத்தில் இருந்து அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட போது, அதை பற்றி ஒருவர் கூட பேசவில்லை.

மக்கள் பிரச்சினைகளுக்காக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி நவநிர்மாண் சேனா தான். ஊழல் புகாரில் சிக்கியவர்கள் அனைவரும் பா.ஜனதா, சிவசேனாவில் சேர்ந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story