மராட்டிய சட்டசபை தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்


மராட்டிய சட்டசபை தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:30 PM GMT (Updated: 13 Oct 2019 10:00 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று பிரதமர் மோடி, ராகுல்காந்தி தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.

மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் மீண்டும் சட்டசபை தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புடன் இரு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

இதேபோல் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். போன்ற சிறிய கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றன.

இக்கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் விடுமுறை தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரத்திற்காக மராட்டியத்தில் குவிந்தனர்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் என பா.ஜனதா தலைவர்கள் பட்டாளத்தையே பிரசார களத்தில் இறக்கியது.

ஜல்காவில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், அரசியல் செய்வதாகவும் பிரதமர் சாடினார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 5 ஆண்டு காலமாக ஊழலற்ற ஆட்சியை தந்துள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

பா.ஜனதா அரசால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

இதேபோல் பிரசாரத்தில் கலந்துகொண்ட மத்திய மந்திரி அமித்ஷாவும் மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தன் பங்கிற்கு எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்தனர்.

இவர்களுக்கு போட்டியாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி லாத்தூர் மாவட்டம் அவுசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு ஓட்டுவேட்டையில் ஈடுபட் டார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “மத்திய அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. 15 பெரும் பணக்காரர்களின் ரூ.5½ லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்து இருக்கிறது.

விவசாயிகளின் துன்பம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பற்றியெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்‌ஷாவும் இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்” என கூறினார்.

நேற்று ஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி மற்றும் அமித்ஷா ஆகிய தலைவர்களின் வருகையால் மராட்டிய தேர்தல் களம் சூடுபிடித் துள்ளது.

Next Story