நிலஅதிர்வுக்கு முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்ய முடியாது - தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் பேட்டி
நிலஅதிர்வை கண்டறிந்து முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்ய முடியாது என்று தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ராஜன்பாலு கூறினார்.
வேலூர்,
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அரக்கோணம் ராஜாளி தேசிய பேரிடர் மீட்பு படையின் 4-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் பூகம்பத்தின்போது கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்து தத்ரூபமாக ஒத்திகை செய்து காண்பித்தனர்.
பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ராஜன்பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
சர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இயற்கை பேரிடர்கள் குறித்தும், அதில் இருந்து தப்பித்து கொள்வது குறித்தும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் நிலஅதிர்வு பாதிப்பு நிலை பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. அதாவது 5.4 முதல் 6.9 ரிக்டர் வரை நிலஅதிர்வு வர வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை சிப்காட்டில் தொழில்நிறுவனங்கள் மற்றும் பெல் நிறுவனம் உள்ளன. இங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுனாமி, மழைவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்க முடியும். அதனால் உடனடியாக முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிர், பொருட்சேதங்களை தவிர்க்கலாம். ஆனால் நிலஅதிர்வை முன்கூட்டியே கண்டறிந்து முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்ய முடியாது. வேலூரில் நிலஅதிர்வுக்கு வாய்ப்பு உள்ளதால் இந்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. தற்போது இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 4 பேர் 14 நாட்கள் பயிற்சிக்காக போபால், டெல்லிக்கு நாளை (இன்று) செல்ல உள்ளனர். பயிற்சிக்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story