நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 12:16 AM GMT)

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ‌ஷில்பா தலைமை தாங்கி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதி தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியம் குறித்து வாக்காளர்களிடம் எடுத்து செல்கின்ற விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. என்ன மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கான முதல் முயற்சியை நாம் தான் எடுக்க வேண்டும். இடைத்தேர்தல்களில் பொதுமக்கள் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் வாக்கை அளிக்க வேண்டாம். சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குறைவான வாக்குகளே பதிவானது. இந்த முறை நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக நாங்குநேரி தொகுதி முழுவதும் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற களக்காடு எவர்கிரீன் அணியினருக்கு கேடயத்தையும், சிறப்பாக தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழையும் கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, பயிற்சி உதவி கலெக்டர்கள் சிவகுருபிரபாகரன், அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story