விழுப்புரம், கோமுகி அணையில் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி


விழுப்புரம், கோமுகி அணையில் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 8:39 PM GMT)

கல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வருகிறது.

அணையில் 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் கோமுகி அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று 40 அடியை எட்டியது. பொட்டியம், கல்படை ஆகிய ஆறுகளின் வழியாக நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு கிடப்பதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும், குடிநீருக்காகவும் கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீருக்காக நேற்று கோமுகி அணையில் இருந்து பழைய பாசன வாய்க்கால் வழியாக வினாடிக்கு 50 கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story