வத்தலக்குண்டு அருகே துணிகரம்: கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் திருட்டு


வத்தலக்குண்டு அருகே துணிகரம்: கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டிவீரன்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின்ரோட்டில் லயன்ஸ் நகரில் தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 29) என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் 5 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஊழியர்கள் பணிமுடிந்து நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் மேற்பார்வையாளர் நவீன்குமார் நிறுவனத்தை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது நிறுவனத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நிறுவனத்துக்குள் சென்று பார்த்தபோது, இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.85 ஆயிரமும், வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வைத்திருந்த எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், செல்போன், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரியர் நிறுவனத்தில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வத்தலக்குண்டு-திண்டுக்கல் மெயின்ரோட்டில் 7 கடைகளை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர். தற்போது மர்மநபர்கள் கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story