திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வாலிபர் கைது


திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 4:43 PM GMT)

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்ட திருவாரூர் முருகன் உள்பட 3 பேருக்கு வங்கி கொள்ளையிலும் தொடர்பு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

திருச்சி,

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 பவுன் தங்க நகைகளும், ரூ.19 லட்சமும் கொள்ளை போனது. வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து லாக்கர்களை உடைத்து தங்களது கைவரிசையை காட்டி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.

இந்த வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்த திருவாரூர் முருகனுக்கு, இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கண்ணாவட்டி கிராமத்தில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரது பெயர் ராதாகிருஷ்ணன் (வயது 28). சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி ஆகும்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வெல்டிங் தொழிலாளர்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தோம். இதில் கியாஸ் வெல்டிங் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தோம். வங்கி கொள்ளை சம்பவத்திற்கு பிறகு யாராவது வெல்டிங் தொழிலுக்கு வராமல் உள்ளனரா? என தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இதில் தான் ராதாகிருஷ்ணன் சிக்கினார். துவாக்குடி பகுதியில் வேலை பார்த்து வந்த நிலையில் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பின் தலைமறைவாகி உள்ளார்.

மதுரையில் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பின் திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன், சுரேஷ், கணேசன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரும் சேர்ந்து தான் கொள்ளையில் ஈடுபட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோல உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், சமயபுரம் வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் இவர்கள் 4 பேரும் தான். லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கியுள்ள திருவாரூர் முருகன், சுரேஷ், கணேசன் ஆகிய 3 பேரையும் இந்த வழக்குகள் தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story