குரூப்-2 தேர்வின் பாடத்திட்ட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்; மக்கள்குறைதீர்க்கும் கூட்டத்தில் இளைஞர்-இளம்பெண்கள் கோரிக்கை


குரூப்-2 தேர்வின் பாடத்திட்ட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்; மக்கள்குறைதீர்க்கும் கூட்டத்தில் இளைஞர்-இளம்பெண்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வின் பாடத்திட்ட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்று கலெக்டரிடம் இளைஞர்-இளம்பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள்-இளம்பெண்கள் பலர் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அரசு பணியில் சேருவதற்காக போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறோம். எங்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழி கல்வியை படித்தவர்கள். இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

இது தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆங்கில மொழிப்பெயர்ப்பு பகுதியால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு பறிபோகிறது. மேலும், மொழிப்பெயர்ப்பு பகுதியில் கட்டாய மதிப்பெண் நீக்கப்பட வேண்டும்.

எனவே குரூப்-2 தேர்வின் பாடத்திட்ட மாற்றத்தை திரும்ப பெற்று, ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் தேர்வை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

கொடுமுடி குருக்கள்தெரு பகுதியை சேர்ந்த வசந்தா (வயது 80) என்பவர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவர் இறந்துவிட்டார். அவர்கள் 3 பேரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் எனது மகளும், அவரது மகனும் எனது வீட்டுக்கு வந்து சொத்துகளை தங்களது பெயரில் மாற்றி தர வேண்டும் என்று துன்புறுத்துகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்களை போலீசார் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடந்த 6-ந் தேதி எனது வீட்டிற்கு வந்த மகளும், பேரனும் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம், நகையை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

கவுந்தப்பாடி அருகே சிங்காநல்லூர் காட்டுவலசு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

பெருந்துறை தாலுகா பாண்டியம்பாளையம் கிராமத்தில் கற்களை வெட்டி எடுக்கும் குவாரி உள்ளது. அங்கிருந்து அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் கீழ்பவானி வாய்க்கால் கரையோரமாக செல்கிறது. இதனால் வாய்க்கால் கரைகளும், மதகுகளும் சேதமடைந்து உள்ளன. மேலும், வெடி பொருட்கள் மூலம் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் புதுக்குமாரபாளையம், குஞ்சரமடை, சத்தியாபுரம், பிரப்நகர், நத்தக்காட்டுவலசு, பாறைக்காட்டுவலசு, கருக்கம்பாளையம், காட்டுவலசு, வாய்க்கால் புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே குவாரியில் ஆய்வு செய்து கல் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷபிக் என்பவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 373 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கஸ்தூரிபா நிகேதன் ஒருங்கிணைந்த வளாகத்தில் படிக்கும் மாணவிகள் தொழிற்கல்வி கற்கும் வகையில் தலா ரூ.5 ஆயிரத்து 565 வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரத்து 260 மதிப்பிலான தையல் எந்திரங்களும், ஒரு பயனாளிக்கு விலையில்லா இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மைத்துறையில் பணிபுரிந்து இறந்துபோன சரவணமுருகன் என்பவருடைய மனைவி எம்.ஜெயந்திக்கு கருணை அடிப்படையில் தட்டச்சராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட 46 சிறப்பு குழந்தைகளை மேட்டுப்பாளையம் ராமாயணம் தீம் பார்க்கிற்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. அவர்கள் சென்ற வாகனத்தை கலெக்டர் சி.கதிரவன் கொடி அசைத்து வழிஅனுப்பி வைத்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story