கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டரிடம் தம்பதி மனு


கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டரிடம் தம்பதி மனு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் தம்பதி மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருப்பூர் இடுவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், முத்தணம்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய மாவட்ட சார்பதிவாளர் அலுவலகம் தற்போது திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இதனை ஊத்துக்குளி தாலுகா நெருப்பெரிச்சல் கிராமத்தில் மாற்றுவதற்காக கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. தற்போது செயல்பட்டு வரும் அலுவலகமே எங்கள் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றினால் 3 பஸ்கள், மாறி 25 கி.மீ. செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே தற்போது செயல்படும் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

போலியான ஆவணங்கள் மூலம் பொதுமக்களின் நலத்திட்டங்களை அபகாிக்கும் அரசு ஊழியர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். ஏழை மக்களை காக்க அரசு ஊழலை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்த ஜெயகணேஷ் தனது மனைவியுடன் சேர்ந்து கொடுத்த மனுவில், நாங்கள் அம்மாபாளையத்தில் பால் பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறோம். பண்ணையை விரிவுபடுத்துவதற்காக தனிநபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கினோம். அசல் தொகையை விட அதற்கு அதிகமாகவே வட்டி செலுத்திவிட்டோம். ஆனால் அந்த நபர்கள் வட்டி கேட்டு தொந்தரவு செய்தும் மிரட்டியும் வருகின்றனர். அதனால் கடந்த 6-ந் தேதி போலீசில் புகார் அளித்தோம் அதன்பின்னர் அவர்கள் எங்களை மிரட்டி பசு மாடுகளை விற்று பணம் செலுத்த வேண்டும் என்று கையொப்பம் பெற்றுக் கொண்டனர். எனவே அவர்கள் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் செட்டிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், திருப்பூர் மாநகராட்சி செட்டிபாளையம் கிராமத்தில் நீர்வழி ஓடை மற்றும் பெருமாநல்லூர் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. மேலும் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை உள்ளது. இந்த வழியாக பள்ளி பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நீா்வழி ஓடை மற்றும் பாதையை விரிவுபடுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் பிரியங்கா நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், திருப்பூர் செட்டிபாளையம் ஊராட்சி பிரியங்கா நகா் கிராமத்தில் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள ஏரி தூர்வாரப்படாததால் மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலையில் தேங்குகிறது. அதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின் றனர். மேலும் ஏரியின் அருகில் உள்ள மின்கம்பங்கள் சாயும் நிலையில் இருக்கின்றது. அதனால் ஏரியின் கரைகளில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். பாண்டியன் நகரில் இருந்து பிரியங்கா நகர் வரும் சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் புதிய சாலை அமைத்து தர வேண்டும். மேலும் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் கொடுத்த மனுவில், திருப்பூர் ஊத்துக்குளி வட்டாலப்பதி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வந்து செல்லும் பஸ் பல வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story