திராவகத்தை முகத்தில் வீசி கல்லூரி பேராசிரியரை கொல்ல முயன்ற ஊழியருக்கு 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


திராவகத்தை முகத்தில் வீசி கல்லூரி பேராசிரியரை கொல்ல முயன்ற ஊழியருக்கு 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

திராவகத்தை முகத்தில் வீசி கல்லூரி பேராசிரியரை கொல்ல முயன்ற ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவையை அடுத்த துடியலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் லட்சுமணசாமி (வயது56). அதே கல்லூரியில் ஊழியராக பணியாற்றியவர் முத்துசாமி(45).இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி பேராசிரியர் லட்சுமண சாமி, கல்லூரி ஆய்வு கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரசாயன செய்முறை தேர்வு குறித்து விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த முத்துசாமி, திராவகத்தை எடுத்து லட்சுமணசாமியின் முகத்தில் வீசியுள்ளார். இதில் அவர் முகம் வெந்து உயிருக்கு போராடினார். மேலும் அருகில் நின்ற மற்றொரு பேராசிரியர் ரவிசங்கர் என்பவர் மீதும் திராவகம் சிதறி விழுந்தது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 2 பேரும் உயிர் பிழைத்தனர்.இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார், முத்துசாமிக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story