கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 7:11 PM GMT)

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் கால்நடைகளுக்கான 17-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கவிழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் வைரஸ் நச்சு கிருமியால் ஏற்படக்கூடியதாகும். தடுப்பூசியால் மட்டுமே இந்த நோயை தடுக்க முடியும். கோமாரி நோயானது கால்நடை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதால் கால்நடைகளுக்கு இந்த நோய் வராமல் காக்க தடுப்பூசி போடுவதே சிறந்ததாகும்.

90 குழுக்கள்

தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம்(நவம்பர்) 3-ந் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 73 ஆயிரத்து 400 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், பாபநாசம் நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சதீ‌‌ஷ், பசுபதிகோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், கால்நடை டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story