வாரிசு சான்று- பட்டா மாறுதல் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது


வாரிசு சான்று- பட்டா மாறுதல் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 7:35 PM GMT)

வாரிசுசான்று-பட்டா மாறுதல் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 43). கூலி தொழிலாளி. இவர் தனக்கு வாரிசு சான்று மற்றும் பட்டா மாறுதல் கேட்டு வாழ்வார்மங்கலத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். பின்னர் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி காளியப்பனை (58) பொன்னுச்சாமி அணுகினார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி, வாரிசு சான்று மற்றும் பட்டாமாறுதல் செய்வதற்கு தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பொன்னுச்சாமி ரூ.9 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத பொன்னுசாமி கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்னுச்சாமியிடம் ரசாயனபொடி தடவிய ரூ.9 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொன்னுச்சாமி வாழ்வார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராமநிர்வாக அதிகாரி காளியப்பனை சந்தித்து ரூ.9 ஆயிரத்தை லஞ்சமாக நேற்று கொடுத்தார்.

இதனை அங்கு மறைந்து இருந்து கண்காணித்து கொண்டு இருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாகீதாராணி தலைமையிலான போலீசார் காளியப்பனை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கரூர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story