சோப்பு வாங்கினால் கார் பரிசு தருவதாக விவசாயியிடம் நூதன மோசடி 2 பேர் கைது


சோப்பு வாங்கினால் கார் பரிசு தருவதாக விவசாயியிடம் நூதன மோசடி 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே சோப்பு வாங்கினால் கார் பரிசு தருவதாக விவசாயியிடம் நூதன மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40), ஆகிய 2 பேர் தங்கராசு வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் நாங்கள் சோப்பு விற்பனை செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால், அதில் ஒரு கூப்பன் இருக்கும், அந்த கூப்பனில் எந்த பொருள் உள்ளதோ அதனை பரிசாக நாங்கள் வழங்குவோம் எனக்கூறி உள்ளனர்.

இதையடுத்து தங்கராசு சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்த போது அதில் ஸ்டவ் பரிசு என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவுக்கு காந்தீஸ்வரனும், பேச்சிமுத்துவும், ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். மேலும் அவரிடம் இந்த பரிசுக்கு மற்றொரு பரிசு உண்டு என்று தெரிவித்ததுடன் அதில் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்து உள்ளது என்றனர். ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று நம்பிய தங்கராசுவிடம் 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும்.

கார் பரிசு

அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தந்து விடுவோம் எனக்கூறி உள்ளனர். இதை நம்பிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும் மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர். அப்போது தங்கராசுவிடம் உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்து உள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது எனக்கூறிவிட்டதால் அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பிய தங்கராசு ரூ.45 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட 2 பேரும் நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் எனக்கூறி விட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய காந்தீஸ்வரன், பேச்சிமுத்து நாங்கள் உங்களுக்கு பரிசாக தர வேண்டிய காரில் வந்து கொண்டு இருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலீசார் காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை. எனவே அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நாங்கள் அவ்வளவு பணம் எடுத்துவரவில்லை.

2 பேர் கைது

நீங்கள் அந்த பணத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம். பணத்தை நேரில் வந்து கொடுத்தாலும் சரி. அல்லது வங்கி கணக்கில் செலுத்தினாலும் சரி. உங்களுக்கு எப்படி வசதியோ அது போல் செய்யுங்கள் என்றனர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது குறித்து அறந்தாங்கி போலீசாரிடம் புகார் கொடுத்தார். உடனே போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சங்கரன்கோவிலில் இருந்த காந்தீஸ்வரன், பேச்சிமுத்துவை சந்தித்து பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் ரே‌‌ஷ்மா வழக்குப்பதிவு செய்து காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story