கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்


கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூர் எஸ்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தங்கராஜ்(வயது 24). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல்(24). இவர்கள் 2 பேரும் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தங்கராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் கூடலூரில் இருந்து தேவர்சோலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். 

அங்கு நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, மீண்டும் கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 8 மணிக்கு கூடலூர் 2-ம் மைல் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் தங்கராஜ், சக்திவேல் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சக்திவேல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் தங்கராஜ் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெள்ளி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து பலியான தங்கராஜ் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

Next Story