தலைவாசல் அருகே, மயான வசதி வேண்டி பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்


தலைவாசல் அருகே, மயான வசதி வேண்டி பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே மயான வசதி கேட்டு பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பேரூராட்சியில் ராமநாதபுரம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களின் பிணத்தை வீ.ராமநாதபுரம்-வெள்ளையூர் செல்லும் சாலையின் அருகே உள்ள தற்காலிக இடத்தில் புதைத்து வருகின்றனர். இதனால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக மயான வசதி வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி சரோஜா (வயது 51) உடல்நலக்குறைவால் நேற்று திடீரென இறந்துவிட்டார். பின்னர் அவருடைய உறவினர்கள் வந்து துக்கம் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து சரோஜா உடல் புதைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. அப்போது அவர்கள் அந்த பெண்ணின் பிணத்துடன் திடீரென தலைவாசல்-பெரம்பலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வீரகனூர் வருவாய் ஆய்வாளர் சங்கரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்டவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், எங்கள் பகுதியில் இறப்பவர்களின் பிணத்தை தற்காலிகமான மயான இடத்தில் புதைத்து வருகிறோம். இதனால் மயான வசதி வேண்டி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இனிமேலாவது மயான பிரச்சினை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் தற்காலிகமான இடத்தில் சரோஜா பிணத்தை புதைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story