சேலத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம்: ஆட்டோ டிரைவரின் நண்பர்களிடம் 2-வது நாளாக விசாரணை
சேலத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவரின் நண்பர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் சிக்கின.
கொண்டலாம்பட்டி,
சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், ஒரு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த பெண், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோகன்ராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோவும், மேலும் சில பெண்களின் ஆபாச வீடியோவும் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், மோகன்ராஜின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் சதாசிவம், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், மோகன்ராஜ் தனது செல்போனை நண்பர் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். அந்த செல்போனை பார்த்த அவர், அதிலிருந்து ஆபாச வீடியோக்களை தனது செல்போனுக்கு பதிவிறக்கம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் சிக்கின. இதனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் யார்? அவர்களும் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, நேற்று 2-வது நாளாக ஆட்டோ டிரைவரின் நண்பர்களான சதாசிவம், மணிகண்டன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்களை மோகன்ராஜின் வீட்டிற்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மோகன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்த அந்த பெண்ணை, அவரது நண்பர்களும் மிரட்டி உல்லாசம் அனுபவித்தார்களா? என்றும் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், ஆட்டோவில் வரும் பெண்களை குறிவைத்து அவர்களை மயக்கி பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து அவர்களை தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story