மாவட்டத்தில் 3½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி - கலெக்டர் மெகராஜ் தகவல்


மாவட்டத்தில் 3½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி - கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 3½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 17-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 21 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 53 ஆயிரத்து 50 கால்நடைகளுக்கு 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே நாமக்கல் மாவட்ட விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொன்னுவேல் உள்பட கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story