நாமக்கல்லில் பயங்கரம்: கணவன்-மனைவி வெட்டிக்கொலை


நாமக்கல்லில் பயங்கரம்: கணவன்-மனைவி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று இரவு கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அவர்களை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல், 

நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50), இவருடைய மனைவி கலாவதி. இவர்களது மகள் அனிதா (23). இவருக்கும் நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்த விமல்ராஜ் (27) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

அனிதா தனது கணவருடன், தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார். விமல்ராஜ், தனது தந்தை நடத்தி வரும் பழக்கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டில் கருப்பசாமி, விமல்ராஜ், அனிதா ஆகியோர் இருந்ததாக தெரிகிறது.

இரவு 10 மணி அளவில் வெளியே சென்று இருந்த கலாவதி வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் ெவவ்வேறு அறைகளில் கருப்பசாமி, விமல்ராஜ், அனிதா ஆகியோர் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்த போது விமல்ராஜ், அனிதா ஆகியோர் இறந்து கிடந்தனர். கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த கலாவதி அலறினார்.

இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் துணை சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். இதில், விமல்ராஜ், அவரது மனைவி அனிதாவை நேற்று இரவு வீடு புகுந்து மர்ம நபர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து ேபாலீசார் விமல்ராஜ், அனிதாவின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவன், மனைவியை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story