பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு


பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 9:14 PM GMT)

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் டவுன் ஹால் அருகே நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டவுன் ஹால் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணாசாலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம், தீயணைப்பு நிலையம் வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், அரக்கோணம் ராஜாளி தேசிய பேரிடர் மீட்புப்படை துணை கமாண்டர் ராஜன்பாலு, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயகுமார், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரிடர் மேலாண்மை தாசில்தார் மீராபென்காந்தி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் மற்றும் மழையால் பேரிடர் ஏற்படுகிறது. நமது மாவட்டத்தில் பெரிய தோல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரிய விபத்துகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது பொதுமக்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பெய்தது. அந்த சமயம் வேலூர், ஆம்பூர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதற்கு முக்கிய காரணம் நீர்வழித்தடங்களை முறையாக பராமரிக்காததும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்படுவதாகும்.

வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின்போது பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு வேறுபகுதியில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் நோய்தடுப்பு மற்றும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை கண்டறிந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் அதிகம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் அரக்கோணம் ராஜாளி தேசிய பேரிடர் மீட்பு படையின் 4-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் பூகம்பத்தின்போது கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து தீயணைப்பு மீட்பு படையினர் தீவிபத்தின்போது மக்களை காப்பாற்றுவது மற்றும் தீயை அணைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) பூர்ணிமா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயிணி, தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், வேலூர் ரெட்கிராஸ் சங்க செயலாளர் இந்திரநாத், தாசில்தார் சரவணன்முத்து, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேரிடர்துறைத்தலைவர் கணபதி, தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் மணிகனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story