தென்திருப்பேரை அருகே, கிராம மக்கள் திடீர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு


தென்திருப்பேரை அருகே, கிராம மக்கள் திடீர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை அருகே குருகாட்டூர் மெயின் ரோடு விலக்கு பகுதியில் இருந்து, குருகாட்டூர் வரையிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதையடுத்து அங்குள்ள காட்டு பகுதியில் இருந்து சரள் மண்ணை டிராக்டரில் எடுத்து சென்று, பழுதடைந்த சாலையை சீரமைப்பதற்கு கிராம மக்கள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று மதியம் குருகாட்டூர் காட்டு பகுதியில் சரள் மண் அள்ளுவதற்காக, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பூலான் உள்ளிட்டவர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த குரும்பூர் போலீசார், அனுமதியின்றி சரள் மண் கடத்த முயன்றதாக பூலான் உள்ளிட்டவர்களை பிடித்து சென்றனர். மேலும் அங்கிருந்த டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை அறிந்த குருகாட்டூர் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து, குருகாட்டூர் மெயின் ரோடு விலக்கு பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.உடனே ஆழ்வார்திருநகரி, குரும்பூர் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பூலான் உள்ளிட்டவர்களை போலீசார் விடுவித்தனர். பறிமுதல் செய்த வாகனங்களையும் போலீசார் திரும்ப ஒப்படைத்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story